Ad Widget

வடக்கின் அபிவிருத்திக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் – மாவை

மக்களுடைய நிலங்களை விடுத்து கடல் பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிரதேசம் நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைத்தையும் இழந்தவர்களாக உள்ளனர். அபிவிருத்தி செய்ய வேண்டிய பல தேவைகள் உள்ளன.

எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு அமைச்சரவையில் விசேட நிதி ஒதுக்கீடுகளை வட பகுதிக்கு ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் போரினால் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இங்கு உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு பட்டங்களைப் பெற்று பல ஆண்டுகளாகியும் வேலை வாய்ப்பு இன்றி இளைஞர் யுவதிகள் உள்ளனர். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும் தமிழர்களது நிலப்பரப்புக்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. எனவே அவற்றை விரைவில் விடுவித்து மக்களை மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ள வேண்டும்.

பலாலியில் விமான நிலையத்தினை அமைத்து ஏனைய நாடுகளுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் .

இந்த அபிவிருத்திகள் அனைத்தும் மக்களது நிலங்களை விடுத்து கடற்பகுதியை அபிவிருத்தி செய்து அவற்றில் அமைக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளுடன் பேசி பணத்தைப் பெற்று வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசு ஆதரவு வழங்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts