Ad Widget

வடக்கின் அடுத்த முதலமைச்சராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்?

வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஸ்ரீபவன் இதுவரையில் தமது உறுதியான பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஸ்ரீபவன் தற்போது சில தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts