Ad Widget

லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழியச் சிறை!

லீசிங் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

“நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தவணைப் பணத்தை வசூலிப்பதற்கு ஒழுங்கு விதிகள் உள்ளன. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த குடும்பப் பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க நகையை குற்றவாளிகள் அபகரித்துச் சென்றுள்ளனர். அவர்களின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதனால் குடும்பப் பெண்ணை அச்சுறுத்திய குற்றத்துக்கு எதிரிகள் இருவரும் தலா ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவேண்டும். குடும்பப் பெண் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றதற்கு குற்றவாளிகள் இருவருக்கும் ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர், அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவரால் லீசிங் முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனத்துக்கான தவணைப் பணத்தை அறவிடுவதற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும் குடும்பத்தலைவர் வெளியில் சென்றிருப்பதாக அவரது மனைவி, நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் குடும்பப் பெண்ணை அவர்கள் அச்சுறுத்தியதுடன், அவர் அணிந்திருந்த தங்க நகையையும் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளின் சந்தேகநபர்கள் இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர் அவர்களுக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தன. பெண்ணை அச்சுறுத்தியதாக முதலாவது குற்றச்சாட்டும் அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றனர் என்று இரண்டாவது குற்றச்சாட்டும் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மற்றும் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் தண்டனைத் தீர்ப்பு கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

Related Posts