லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (06) இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதியினைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை ரேணுகாரூபன் (வயது 35) என்ற நபரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் குடமியன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் ஏற்கெனவே நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவத்துடன் ஐந்தாவது சந்தேகநபராக இவர் தேடப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் திரும்பிய நிலையில், கடந்த 01ஆம் திகதி, பொலிஸார் இவரைக் கைது செய்திருந்தனர். மறுநாள் 02ஆம் திகதி, சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலே சிறைச்சாலை அதிகாரிகளுடன் இவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசியமான சொற்களைப் பாவித்து முரண்பட்டுள்ளார். இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related Posts