லட்சக்கணக்கானோர் புடைசூழ மடு அன்னைக்கு திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழா திருப்பலி, நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

இத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள், மடு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுச் சென்றனர்.

அத்தோடு, மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் முதல் அடைமழை பெய்து வந்த காரணத்தால், இன்றைய திருவிழாவை வழக்கம் போல கொண்டாட முடியாதென்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகரித்த மழை காரணமாக பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆலயத்திலிருந்து நேற்று வெளியேறியிருந்தனர்.

எனினும், நேற்று இரவு முதல் காலநிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, திருவிழா இனிதே நடைபெற்றது.

Related Posts