Ad Widget

ரெக்சியன் கொலை : யசிந்தனுக்கு தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியல் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2ஆவது சந்தேக நபரான யசிந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதவான் யசிந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தலையில் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் முதலாவது சந்தேக நபராக ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதியான லண்டன் யசிந்தன் 2ஆவது சந்தேக நபராகவும் 3ஆவது சந்தேக நபராக ரெக்சியனின் மனைவி அனிதாவும் கைது செய்யப்பட்டனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மூவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். மேல் நீதிமன்றத்தில் பிணை மனு கோரியதையடுத்து அண்மையில் மேல் நீதிமன்றினால் கமல் மற்றும் அனிதா கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் பிணை எடுக்க ஆளில்லாத காரணத்தினால் கமல் மற்றும் அனிதா ஆகியோர் 2வாரங்களுக்கு மேலான தொடர்ந்தும் சிறைச்சாலையில் இருந்தனர். இதனையடுத்து 16ஆம் திகதி கமலும் அதற்கு முன்னர் அனிதாவும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பிணை மனு மேல் நீதிமன்றில் வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் யசிந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று இவர்களுக்கான வழங்கு விசாரணை நடைபெற்றது. யசிந்தன் சிறையில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கமல் மற்றும் அனிதாவும் விசாரணைகளில் கலந்து கொண்டனர். எதிர்வரும் 14 ஆம் திகதி அடுத்த தவணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts