Ad Widget

ரிக்கெட் வழங்காத பஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எப்போது? விசனம் தெரிவிக்கின்றனர் மக்கள்

minibusதனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்க வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெரும்பான்மையான தனியார் பஸ்கள் பின்பற்றுவதில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி சங்கத்துக்கு உட்பட்ட தனியார் பஸ்களில் “ரிக்கெட்’ வழங்கப்படுகின்ற போதும் ஏனைய சங்கங்களுக்கு உட்பட்ட பஸ்கள் இதனைப் பின்பற்றுவதில்லை.
தனியார் பஸ் நடத்துநர்கள் “ரிக்கெட்’ வழங்காததன் காரணமாக பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

பெரும்பாலும் நடத்துநர்கள் மீதிப் பணமாக சில்லறைக் காசுகளை வழங்க பின்னிற்பதால் பிரச்சினை ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் முகமாக தனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பலமுறை அறிவித்தல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த டிசெம்பர் மாதம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்துப் பொலிஸாரால் 2013 ஜனவரியில் இருந்து ரிக்கெட் வழங்காத தனியார் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தனியார் பஸ்கள் இன்னமும் ரிக்கெட் வழங்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை. பொலிஸாரும் ரிக்கெட் வழங்காத பஸ்களுக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, எதிர்காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts