Ad Widget

ராணுவ ஆதிக்கத்தால் அவலப்படும் பெண்கள் வாழும் பூமியில் முப்படைகள் வேண்டாம்: மாவை

சிறு குழுக்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக, யுத்தத்தில் உயிர்களை பறிகொடுத்து துன்பப்படும் மற்றும் ராணுவ ஆதிக்கத்தால் அவலப்படும் பெண்கள் வாழ்கின்ற இடங்களில் முப்படைகளை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாதென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக யாழில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை களத்தில் இறக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாவை சேனாதிராஜா மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளுக்கு பதிலாக, சிறந்த நிர்வாக பண்புகளையும் நேர்மையையும் கொண்ட பொலிஸாரை வடக்கு கிழக்கில் நிறுத்தி, வன்முறைகள், வாள்வெட்டுக்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு, நேர்மையாகவும், வினைத்திறனுடனும், எந்தவித ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இடமளிக்காத பொலிஸ் அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, வடக்கு கிழக்கில் தொடரும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்வதாக மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts