Ad Widget

ராஜித சிஐடியின் காவலில்!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக இரண்டு பேர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

அந்த விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்ற விசாரணைத் திணைக்களம், ராஜித சேனாரத்னவின் செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட இருவரையும் கைது செய்துள்ளது.

அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவையும் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றன.

அந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றில் பிடியாணை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவுக்கு அறிவித்தல் வழங்கினார்.

அதனடிப்படையில் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் குற்ற விசாரணைப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றிருந்தனர்.

கடந்த மூன்று நாள்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான நடவடிக்கையை குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னவின் வீடு நேற்று மாலை சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து குற்ற விசாரணைப் பிரிவின் சோதனையிட்டிருந்தனர்.

எனினும் அங்கு அவர் இல்லை என அறிந்த குற்ற விசாரணைப்பிரிவினர் தேடுதலைக் கைவிட்டுச் சென்றிருந்தனர்.

அவர் தற்போது கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

Related Posts