Ad Widget

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் திணறும் உக்ரைன்! உலக நாடுகளுக்கு காத்திருக்கும் சிக்கல்

உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பழைமையான தேவாலயம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 போ் காயமடைந்துள்ளனர்.

நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.

தேவாலயத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் மீட்டு வெளியே எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது தேவாலயத்தின் உள்ளே இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒடேசா நகரத்தின் மீதான தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு கூலிப்படையினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மற்றும் தரையிலிருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒடேசா மற்றும் அருகில் உள்ள சோர்னோமோர்ஸ்க் நகரின் முக்கியமான ஏற்றுமதி மையங்கள் பெரிதும் சேதமடைந்தன.

சுமாா் 60,000 டன் தானியங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைனின் விவசாய அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைனின் உணவு தானிய ஏற்றுமதிக்கு முக்கிய மையமாக ஒடேசா திகழ்கிறது.

இந்த துறைமுக நகரத்தை குறிவைத்து ரஷ்ய இராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன்-ரஷ்யா போரால் உக்ரைனிலிருந்து பல நாடுகளுக்கு உணவு தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டதையடுத்து, கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யா முன்பு கையொப்பமிட்டிருந்தது.

ஒடேசா நகரத்திலிருந்து உணவு தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடை செய்யாது என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யா விலகியதையடுத்து ஒடேசா நகரம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Posts