Ad Widget

ரவிராஜ் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குத் தொடர்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உண்டு எனத் தெரியவந்துள்ளது.அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ள வழக்கின் சந்தேக நபர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சம்பத் ப்ரித்விராஜ் என்ற நபரே இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரவிராஜ் படுகொலைச் சம்பவத்தை கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டதாகவும், கங்காரமய லொன்றிவத்த பிரதேசத்தில் காணப்பட்ட புலனாய்வுப் பிரிவு காரியாலயத்தில் இந்த திட்டமிடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பத் ப்ரித்விராஜ், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் எனக் கைதுசெய்யப்பட்ட போதிலும் பின்னர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட நடவடிக்கைகளின்போது தாம் மோட்டார் சைக்கிள் செலுத்துநராக மட்டக்களப்பில் கடமையாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடமையாற்றிய காலத்தில் பழனிசாமி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், 2006ஆம் ஆண்டு கொழும்பு வந்த பின்னரும் அவருடனான நட்பு தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழனிசாமியுடனான தொடர்பின் ஊடாக பிரசாத் குமார, சேரன், வஜிர, காமினி செனவிரட்ன, பெபியன் ரொய்ஸ்டன் மற்றும் ஏனைய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி ரவிராஜை கொலைசெய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் மீளவும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வேறு சிலருடன் ராவிராஜை கொலைசெய்யும் நடவடிக்கைகாக தாம் அழைக்கப்பட்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காமினி செனவிரட்ன என்ற நபரே ரவிராஜ் மற்றும் அவரது சாரதியை சுட்டார் எனவும் காமினியை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லும் பொறுப்பு தமக்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான பூரண விவரங்கள் தெரிந்திருக்கவில்லை எனவும், கொலையுண்டது யார் என்பதனை பின்னரே அறிந்து கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts