Ad Widget

ரவிராஜ் கொலை வழக்கு; விடுலையான கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறந்து விட்ட நிலையிலும், இருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் வழக்கில் சமூகமளிக்காத நிலையிலும், மூவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தரப்பான சசிகலா ரவிராஜ் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கும் அழைப்பாணை விடுக்க மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கடற்படைப் புலனாய்வு அதிகாரிகள் மூவரும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாததால் அவர்களுக்கான நீதிமன்ற ஆணையை சமர்ப்பிக்க முடியவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த மனு விசாரிக்கப்பட்ட போது, காமினி ஹெட்டியாராச்சி, சந்தன பிரசாத், பிரதீப் சமிந்த ஆகிய மூன்று கடற்படை அதிகாரிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மே 19ஆம் திகதி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை ஜூன் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts