Ad Widget

ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் மேலும் 3 பேர் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

nadaraja-ravi-raj

இவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோர்களில் ஒருவர் இலங்கை கடற்படை அதிகாரி என்று கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், மற்ற இருவர் கடற்படையிலிருந்து ஒய்வு பெற்ற அதிகாரிகள் என்றும் தெரிவித்தார்.

ரவிராஜ் கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போலிஸ் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமையவே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு கொழும்பு நகரில் 5 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது, போலிஸ் அதிகாரி ஒருவர் கொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் இந்த சந்தேக நபர்கள் தொடர்பு பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரவிராஜ் கொலை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகளை வரும் ஏப்ரல் 28 ம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்புநீதிமன்றம் ஒன்று அண்மையில் உத்தரவிட்டது.

Related Posts