Ad Widget

ரணில் – சந்திரிகா லண்டனில் சந்திப்பு, தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டாமேன கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை லண்டனில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை தொடர்பில் அரசாங்கத் தரப்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ranil-chantherecca

”கடந்த 2010 ஆம் ஆண்டில் எதிரணியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆதரவு வழங்கினார். அதேபோன்று கடந்த 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை” என்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

லண்டனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை போட்டியிடவேண்டாம் என்றும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறும் சந்திரிகா குமாரதுங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் பொதுவேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று முறைமையை நீக்கி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ”இந்த விடயம் குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் உண்மையில் சந்தித்தார்களா என்று தெரியவில்லை. எவ்வாறெனினும் கடந்த முறையும் இந்தத் தரப்பினர் இவ்வாறு இணைந்திருந்தனர்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் விடயததில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏதாவது பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குறித்த அரசாங்க முக்கியஸ்தர் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றும் கூறினார்.

Related Posts