Ad Widget

ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை

ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

mano-ganeshan

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக, முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும்.

ஆட்சி மாற்றத்தால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாச்சார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இவையே தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைகளாக இருக்க வேண்டும்.

இந்த ஆட்சி மாற்றத்துக்காக பல்வேறு காரணங்கள் கொண்டு எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை. இது கசப்பானதாக இருந்தாலும் உண்மை.

ஆனாலும், ஆட்சிமாற்றம் எமக்கு தேவை. இந்நிலையில் எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும்.

இன்றைய இன, மதவாத ஆட்சியை மாற்றி ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த எதிரணி கூட்டை இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளோம். இந்த செயற்பாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி பல்வேறு துன்பங்களையும், சவால்களையும் மீறி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

இது நாடு முழுக்க வாழும் மக்களுக்கு தெரியும். பல்வேறு அவமானங்களையும். துரோகங்களையும் கட்சி தலைவர் என்ற முறையில் நான் சந்தித்து எமது நேர்வழி பயணத்தில் இந்த இடத்தை அடைந்துள்ளோம். எனவே இந்த எதிரணி கூட்டு ஒரு மிகப்பெரும் வெற்றியாகும்.

அதற்காக, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எதிரணி ஆட்சி பீடம் ஏறினால் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வுகளில் பாலுந்தேனும் உடனடியாக ஓடும் என நான் கூறவில்லை.

அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து நாம் ஏமாற தேவையில்லை. யதார்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். எமது முதல் நோக்கம் ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும்.

அடுத்த கட்டமாகவே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு தேடல்களை முன்னெடுக்க முடியும். அத்தகைய ஒரு சூழல் இன்று தேசியரீதியாகவும், சர்வதேசியரீதியாகவும் ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினையையும், அதிகார பகிர்வையும் இனியும் எவரும் ஒத்தி வைக்க முடியாது.

இந்த ஆட்சிமாற்றத்திற்காக பிரதான பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் ஒன்று சேர்ந்துள்ளன. எமது புதிய ஜனாதிபதி, ஓர் இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார். புதிய அரசும் ஒரு இடைக்கால அரசாகவே இருக்கும். நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வழங்கிவிட்டு இந்த அரசு மறையும்.

அடுத்த பொது தேர்தலின் பின்னர் தோன்றும் புதிய அரசு, ஒரு பாராளுமன்ற அரசாக இருக்கும். அந்த அரசை அமைக்கும் தேர்தலில் இன்று கூட்டு சேர்ந்து இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக போட்டியிடாது.

இன்று ஆட்சி மாற்றம் கோரி பல்வேறு கட்சிகள் எதிரணியில் இணைந்துள்ளன. இவற்றில் மிகப்பெரும்பாலான கட்சிகள் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக அவசரப்பட்டு தீர்மானம் எடுக்கப்போவதில்லை என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

சரியான முடிவை சரியான நேரத்தில் சம்பந்தன் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஏனைய கட்சிகள் அனைத்தும் படிப்படியாக எதிரணியில் இணைய வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன். தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் எதிரணி கூட்டில் இணைந்தால்தான், இந்த கூட்டில் சம பலம் ஏற்படும் என்றார்.

Related Posts