Ad Widget

ரட்ணஜீவன் கூலின் bigdeal பற்றி தேர்தல் ஆணைக்குழு விசாரணை நடத்த பணிப்பு.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்த வழக்கிற்கு பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் நேர்மைத்தன்மையில் சந்தேகம் வெளியிட்ட நீதிபதி, அவர் எழுதிய கட்டுரை நீதித்துறையை அவமதிப்பதாக கூறி, அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பரப்புரையில் ஈடுபட்டார்கள் என, த.தே.கூட்டமைப்பின் வேட்பாளரும் மாவை சேனாதிராசாவின் உதவியாளருமான சோமசுந்தரம் சுகிர்தன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்றைய விசாரணைக்கு ரட்ணஜீவன் கூல், மணிவண்ணன், ஆலய குருக்கள் ஆகியோரை சமூகமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று ரட்ணஜீவன் கூல் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.

இதற்கிடையில், இந்த விசாரணையை காங்கேசன்துறை பொலிசார் முறையாக அணுகவில்லை என ரட்ணஜீவன்கூல், பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக முறையிட்டிருந்தார்.

இதையடுத்து, பொலிசார் மீள் விசாரணை நடத்தி, அறிக்கையை நீதிமன்றதில் தாக்கல் செய்திருந்தனர். இந்த சமயத்தில், பத்திரிகையொன்றில் ரட்ணஜீவன் கூல் கட்டுரையெழுதியிருந்தார். இதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பொலிசார், நீதிமன்றம் ஆகியன கூட்டாக இணைந்து செயற்படுகிறார்கள், bigdeal என்ற பதத்தை பாவித்து கட்டுரை எழுதியிருந்தார்.
நேற்றைய விசாரணையின்போது, தேர்தல் பிரசார சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கவில்லையென பொலிசார் புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

இதைவிட வேறு சான்றுகள் உள்ளனவா என மாவையின் உதவியாளர் சுகிர்தனிடம் கேட்க, வேறு சாட்சிகள் இல்லையென அசடு வழிந்தார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு சோடிக்கப்பட்டதென, த.தே.ம முன்னணி சார்பான சட்டத்தரணி குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரம் நடக்காத நிலையில் மாவிட்டபுர கோயில் குருக்களை நீதிமன்றத்திற்கு இழுத்து சைவ மக்களை சுகிர்தன் அவமானப்படுத்தி விட்டார் என சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டார்.

வழக்கை தொடர்ந்து நடத்த ஆதாரங்கள் இல்லையென்பதால், தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

இதேவேளை, ரட்ணஜீவன்கூல் எழுதிய கட்டுரை தொடர்பாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டி, ரட்ணஜீவன் கூல் தமிழரசுக்கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும், தேர்தல் மற்றும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதிக்கும் விதமாக உறுப்பினர்கள் செயற்பட கூடாதென்றும் சுட்டிக்காட்டினர்.

அந்த கட்டுரை நீதித்துறையை அவமதிப்பதாக மன்று கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதி யூட்சன், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையிலிருந்து விலகி பக்கச்சார்பானதாக அந்த கட்டுரை இருப்பதாக குறிப்பிட்டதுடன், ரட்ணஜீவன் கூலின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

Related Posts