Ad Widget

யு.எஸ். பத்திரிகையாளரை தலை துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்துள்ளனர்.

மேலும் ஒரு அமெரிக்கரையும் தாங்கள் சிறை பிடித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ஈராக் விவகாரத்திலிருந்து அமெரிக்கா விலக வேண்டும். மீறி தீவிரமாக ஈடுபட்டால் இதேபோல மேலும் பல சம்பவங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

ISIS-Erack

இதுதொடர்பான ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி என்பவரை அவர்கள் தலையைத் துண்டித்துக் கொல்லும் கொடூரக் காட்சி இடம் பெற்றுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு போலி சிரியாவிலிருந்து காணாமல் போனார். தற்போது அவரைப் படுகொலை செய்த விவரத்தை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல தாங்கள் பிடித்து வைத்துள்ள இன்னொரு அமெரிக்கர் உயிருடன் இருப்பதும், பிணமாவதும் ஈராக்கில் அமெரிக்கா நடந்து கொள்வதைப் பொறுத்தது என்றும் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

“A Message To America” என்ற பெயரிலான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் நம்பகத்தன்மை குறித்து இதுவரை தகவல் இல்லை.

கடந்த ஐந்து வருடமாக மத்திய கிழக்கு நாடுகளில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி இவர் கடத்திச் செல்லப்பட்டார். அதேபோல இன்னொரு பத்திரிகையாளரான ஸ்டீவன் சோட்லோப், 2013ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு சிரியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கடத்தப்பட்டார். தற்போது அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல நூறு பேரை கொடூரமாகக் கொன்று குவித்துள்ள போதிலும் அமெரிக்கர்கள் யாரையும் பகிரங்கமாக இதுவரை கொன்றதில்லை. இந்த நிலையில் தற்போது அமெரிக்க பத்திரிகையாளரை பகிரங்கமாக தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ள செயல் அமெரிக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் பல பகுதிகளையும், சிரியாவில் உள்ள சில பகுதிகளையும் இந்தத் தீவிரவாத அமைப்பு ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இஸ்லாமியக் குடியரசை நிறுவியுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது. சமீபத்தில் வடக்கு ஈராக்கில் யாஸிதி சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது விமானப்படையின் ஒரு பிரிவை அனுப்பி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.

இதனால் தீவிரவாதிகள் கோபமடைந்துள்ளனர். இதையடுத்தே தற்போது அமெரிக்காவுக்கு எதிராக அவர்கள் திரும்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியில் கருப்பு உடையுடன், முகமூடியுடன் கூடிய நபருக்கு அருகே முழங்காலிட்டபடி போலி அமர்ந்திருக்கிறார். பின்னர் ஒரு செய்தியை எடுத்து போலி வாசிக்கிறார். அதை தீவிரவாதிகள்தான் எழுதிக் கொடுத்தது போல உள்ளது.

அதில், என்னை உண்மையில் கொல்லப் போவது அமெரிக்காதான். எனக்கு இன்னும் சில காலம் அவகாசம் தரப்படும் என விரும்புகிறேன். எனது குடும்பத்தை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் சுதந்திரம் எனக்கு அளிக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறுகிறார் போலி.

அதன் பின்னர் இன்னொரு காட்சி வருகிறது. அதில் துண்டிக்கப்பட்ட தலையுடன் போலியின் உடல் கிடக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அதிபர் ஒபாமாவுக்கு அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அவர் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தீவிரம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts