Ad Widget

யுத்த பாதிப்பு பகுதிகளில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் உடன் தேவை!

வடக்கு மாகாணத்தில் மக்களது வறுமை நிலையைப் போக்குவதற்கு மேலும் உரிய திட்டங்கள் அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

கடந்த கால யுத்தம் காரணமாக பல்வேறு ,ழப்புகள் மற்றும் அழிவுகளைச் சந்தித்துள்ள எமது மக்களில் பெரும்பாலானவர்கள் தொழில் வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் இன்றி, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் இந் நிலையிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தோம். அத்திட்டங்களை மீண்டும் தொடரும் அதே வேளை, மேலும் புதிய திட்டங்களும் அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், நமது நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 சத வீதமான மிக மோசமான வறுமை நிலை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இது 13 சத வீதமென்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

எனவே, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கபட்டுள்ள இப்பகுதிகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இதற்கு உகந்ததொரு பொறிமுறை அமைத்து, அதனூடாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts