Ad Widget

யுத்தத்துக்கு பின்னர் எமது கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது – சுரேஸ்

எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்துள்ளோம். யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் எமது கல்வி முன்னேற்றம் கண்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாங்கள் நீண்ட காலமாக யுத்த சூழலுக்குள் வாழ்ந்து வந்தவர்கள். எங்களது உரிமைகளுக்காக பல ஆயிரம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ளோம். 30 வருடகாலம் கல்வியில் பின்தங்கியிருந்தோம்.

நாங்கள் எல்லோரும் எமது உரிமைகளுக்காக போராடி, எமது உறவுகள், சொந்தங்கள், பந்தங்களை இழந்தோம். உடமைகளையும் இழந்தோம். இச்சூழலில் கல்வியும் காணாமல் போனது. மருத்துவ, பொருளியல் பீடங்களுக்கு படிக்கப்போன மாணவர்கள் கூட, தமது கல்வியை விட்டுவிட்டு, எமது மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிரையும் கொடுத்த சமூகம் எங்களுடைய சமூகம்.

நாங்களோ மக்களோ வேலையில்லாமல் போராடவில்லை. எமது எதிர்கால சந்ததிக்காக, இந்த மண்ணில் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக எமது மொழி, கலாசாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராடினோம். இறுதியுத்தத்தில் 70 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் கருத்து கணிப்பு கூறுகின்றது என தெரிவித்தார்.

Related Posts