Ad Widget

யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூற ஒரு பொது தினம் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் அழிவு யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூற ஒரு பொது தினம் அவசியம். அதேபோல் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்வதற்குப் பொதுவான நினைவுத் தூபி ஒன்றும் வடமாகாணத்தின் ஓமந்தைப்பகுதியில் பொருத்தமான இடத்தில் நிறுவவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

அந்தப் பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல ஆயிரம் பேர்கள் யுத்தத்தின் பெயராலும், அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் பெயராலும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களை நினைவு கூறவும், அவர்களுக்கான மத சடங்குகளை நிறைவேற்றவும் பொதுவான தினம் ஒன்றைத் தீர்மானிப்பதும், பொதுவான நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்படுவதும் அவசியமாகும்.

யுத்தத்தில் பலியான இலங்கைப் படைகளுக்கும், இந்திய படைகளுக்கும் நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல், யுத்தத்தில் பலியாகிய எமது உறவுகளையும் நினைவு கூறவும், மரியாதை செய்யவும் வழிவகை செய்யப்படுவதானது, போரின் வடுக்களைச் சுமந்துள்ள மக்களுக்கு ஆறுதலாக இருக்கும். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் பங்களிப்புச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts