Ad Widget

யாழ். வைத்தியசாலை தொண்டர்கள் 44 பேருக்கு சிற்றூழியர்களுக்கான நியமனம்

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக சேவையாற்றிய 44 பேருக்கு, சுகாதார சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். தாதிய பயிற்சி கல்லூரியில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Daklas-hospital

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.

குறித்த சிற்றூழியர் நியமனத்தை தமக்கு வழங்க கோரி யாழ். போதனா வைத்திய சாலையில் நீண்டகாலமாக தொண்டர்களாக பணியாற்றியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 13ம் திகதி முதல் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வந்த தொண்டர்க​ளை கடந்த 23 ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று சந்தித்தார்.

“வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக 168 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும். அந்த நியமனத்தின் போது உங்களில் தகமை உள்ள 80 பேர் உள்வாங்கப்படுவீர்கள்.

ஏனையோரது நியமனங்கள் தொடர்பாக ஜனவரி 2ம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடி சாதகமான முடிவு எடுக்கப்படும் எனவும் அதுவரையில் போராட்டத்தை கைவிட்டு வைத்தியசாலையினதும் நோயாளர்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு இருந்தனர்.

அன்றைய தினம் தொண்டர்களில் 80 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்த போதிலும், இன்றைய தினம் 44 பேருக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஏனைய 36 பேரும் உரிய ஆவணங்களை குறித்த காலப்பகுதியில் வழங்காததினால் இன்றைய தினம் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும், அந்த 36 பேரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததும் அவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும் எனவும் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

தொண்டர்களின் 11 நாட்கள் போராட்டம் கைவிடப்பட்டது

Related Posts