Ad Widget

யாழ். வைத்தியசாலைக்கு புதிய லேசர் கருவி

யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிலையத்திற்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன லேசர் கருவி அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

sribavanantharaja_jaffna_hos

மேற்படி கருவியை, அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் மற்றும் அவுஸ்திரேலிய றொட்டறிக் கழகம் ஆகியன இணைந்து அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகத் அவர் கூறினார்.

இந்தக் கருவி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமையால், கொழும்பில் மேற்கொள்ளப்படும் லேசர் சத்திரசிகிச்சையை யாழில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருவி மூலமான சிகிச்சைகள் கடந்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கருவி தொடர்பாக கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மு.மலரவன் கூறுகையில்,

மேற்படி கருவி கிடைக்கப்பெற்றதன் காரணமாக கொழும்பிற்கு செல்லவேண்டிய தேவை, பணவிரயம் மற்றும் மொழிப் பிரச்சினை என்பன பெருமளவு தவிர்க்கப்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் கருவி மூலமான சிகிச்சையானது வாரத்தின் 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றதுடன் இந்தச் சிகிச்சையை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மக்களும் பெற்றுச் செல்கின்றனர்.

அத்துடன், சிறுவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை அலகும் வெகுவிரைவில் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

Related Posts