சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளதாகவும், விரைவில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமது புதிய கட்சிக்கு சிறுபான்மை இனத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பஷில், யாழில் புதிய அமைப்பாளர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் விரவி வாழும் பகுதிகளில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷவே களத்தில் இறங்கவுள்ளதாக பஷில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்களை பிரத்தியேகமாக சந்தித்து வரும் ராஜபக்ஷாக்கள், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவை பெறும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.