யாழ் மாவட்ட செயலகத்தின் பொன்விழா இன்று!

யாழ் மாவட்ட செயலகத்தின் 50 ஆவது நிறைவினையொட்டி இன்று (21) ஆம் திகதி பொன்விழா கொண்டாடப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் தலைநகரில் விசாலமாக அமையப்பெற்ற மாவட்ட செயலகமானது அனைத்து மாவட்ட மக்களும் இதுவரை காலமும் அளப்பெரிய நற் சேவைகளை ஆற்றி வருகின்றது. இனிமேலும் ஆற்றி வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

kachcherey-district -1

இலங்கையின் மூன்றாவது பெரிய அலுவலகம் என பெயர் பெற்ற யாழ் மாவட்ட செயலகம் அமையப் பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இலங்கையில் இரண்டாம் தர நிர்வாக அலகுக்கான மாவட்ட செயலக நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் மத்திய அரசிற்கும் மாவட்டத்திலுள்ள அமைச்சுக்களின் இலாக்காக்கள் மற்றும் பிரதேச செயலகங்களிற்கிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தவும், மாவட்டத்தின் அபிவிருத்தி, மற்றும் மாவட்டத்திலுள்ள சிறிய நிர்வாக அலகுகளுக்கு உதவிகள் வழங்குவது போன்ற செயற்பாடுகள் நாட்டிலுள்ள 25 மாவட்டத்திலும் அமைக்கப்பட்ட மாவட்டசெயலகங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கமைய இலங்கையின் பெருநகரங்களிலொன்றான யாழ்ப்பாணத்திலும் இற்றைக்கு 180 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட செயலக நிர்வாகம் அப்போதைய ஆட்சிக்காரர்களினால் நடைமுறைக்கு வந்தது. யாழ் பழைய பூங்காவிற்கு அண்மையிலுள்ள சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்டத்தின் முதலாவது மாவட்ட செயலக அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டு குறித்த கட்டடத்தில் அதன் பணிகள் சுமார் 130 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இருந்தும் போதிய இடப்பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள மத்திய அமைச்சுக்களின் நிர்வாக செயலகங்களை ஒன்றிணைத்து நிர்வகிக்க வேண்டி மாவட்டத்திற்கான புதிய கட்டடம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து சுமார் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பழைய கச்சேரிஅலுவலகத்திற்கு முன்னாள் மாவட்டத்திற்கான புதிய செயலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஒன்றரைக் கோடி நிதி ஒதுக்கீட்டில் அமையப் பெற்று வந்த இக்கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு பெற்று 1965 ஆம் ஆண்டு இக்கட்டடம் தனது மக்கள் சேவையை ஆரம்பித்தது.

அப்போதைய உள்நாட்டு மந்திரியாக இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகித்த கௌரவ. டபிள்யு. தகநாயக்கவினால் தற்போதைய யாழ் மாவட்ட செயலக கட்டடம், யாழ்ப்பாண கச்சேரியாக 1965 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அப்போது இலங்கையிலிருந்த அலுவலகங்களின் தரவரிசையில் யாழ்ப்பாணத்தில் அமைந்த இக்கட்டடமானது மூன்றாவது பெரிய அலுவலகமாக அமையப் பெற்றதானது அக்காலப்பகுதியில் யாழ் மாவட்டத்திற்கு இன்னொரு சிறப்பம்சமாக அமைந்தது.

யாழ் மாவட்ட கச்சேரிஅலுவலகம் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இயங்கிய மத்திய அமைச்சுக்களின் எட்டு நிர்வாக அலுவலகங்களின் செயற்பாடுகளும் அதே ஆண்டில் இப் புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இப்புதிய கட்டிடம் இயங்கப் பெற்ற காலப்பகுதியில் இக்கட்டிடத்தின் முதலாவது அரசாங்க அதிபராக திரு. நேவில் ஜயவீர அவர்கள் கடமையாற்றினார்.

தொடர்ந்து இன்று வரையிலான காலப்பகுதியில் 21 அரசாங்க அதிபர்கள் இம்மாவட்டத்தின் ஆட்சியாளர்களாக தமது பணிகளை சிறப்புடன் முன்னெடுத்துள்ளமையானது இக்கட்டடத்தின் தற்போதைய பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மாவட்டஅரசாங்க அதிபராக திரு.என்.வேதநாயகன் அவர்கள் கடமையாற்றி வருவதுடன் இந்த கட்டிடம் சுமார் 41 நிர்வாக அலுவலகங்களும் அவற்றில் பணிபுரியும் நானூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அரசிற்கும் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், மற்றும் பிரதேச செயலகங்கள், ஏனைய நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி அதன்மூலம் மக்கள் பணிகளை முன்னெடுத்து வந்த மாவட்ட செயலக கட்டடம் தற்போது ஐம்பது ஆண்டுகள் கடந்தநிலையில் இன்றும் கம்பீரத்துடன் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

kachcherey-district -2

Related Posts