Ad Widget

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45% செலவிடப்பட்டுள்ளது!

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு 7,724 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு 7,724 மில்லியன் ருபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3,518 மில்லியன் ரூபா நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 96.53 வீதம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த 2016 ஆம் ஆண்டு 99.45 வீதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து பாரிய நிதிகள் கிடைத்துள்ளன.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்களிப்புக்களின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்துள்ளன.

நிர்வாகம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், அனர்த்த முகாமைத்துவம், குடிநீர், வீதி போக்குவரத்து, விவசாயம், உட்கட்டுமானம் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் மீள்குடியேற்றத்தின் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சினால், 4,039 மில்லியன் ரூபா நிதியும், விவசாயம் 2,415 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.

விசேட திட்டங்களாக ஊர்காவற்துறை இருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான படகுச் சேவை, நெடுந்தீவு இறங்கு துறைமுகம், மற்றும் காரைநகர் ஊர்காவற்துறைக்கான பாலம் அமைக்கும் வேலைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

மேலும் “2017 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்.

அந்த வகையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக நல்லிணக்க வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் எனவும் தெரிவித்தார்.

Related Posts