Ad Widget

யாழ். மாவட்டத்தில் தற்கொலை முயற்சி அதிகரிப்பு; வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன்

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒவ்வொருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த போதை வஸ்துப் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரு சமூகத்தை எல்லா வழிகளிலும் தாக்கி அழிக்க வேண்டும் என்பதற்கு முக்கிய ஆயுதமாக இந்த போதைப்பொருள் பாவனை பரப்பப்படுகின்றது.

ஒரு சமூகத்தின் பொருளாதாரம் , ஆளுமை , கலாச்சாரம், கல்விநிலை போன்றவற்றை அழிப்பதற்கு இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகின்றது.

இதிலிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுவதற்கு பலருடை கூட்டு பங்களிப்பு அவசியம். ஏனைய மாவட்டங்களை விட யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது.

இதனை தடுக்க பாடசாலை , சமூக மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை மிகவும் வரவேற்கத்தக்கது.

போதைப்பொருள் தாக்கத்தின் ஒரு பகுதியை தான் நாங்கள் தற்போது பார்க்கின்றோம். ஆனால் மறைமுகமான பல்வேறு வடிவங்களில் பாரிய தாக்கத்தை எங்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றன.

இதன் விளைவுகளில் ஒன்றுதான் தற்கொலை முயற்சி . எங்கள் மத்தியில் இது பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் நேரடியாக பாதித்து இருக்கலாம் அல்லது குடும்பத்தினரால் பாதித்து இருக்கலாம்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் தான் தற்போது பெருமளவிலானவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் இயற்கையாக நோய்வாய்ப்படுபவர்களை உரிய சிகிச்சைக்கு உட்படுத்துவது கடினமாக உள்ளது. அவர்களுக்கு உரிய போதுமான வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை.

அத்துடன் விடுதிகளிலும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் தொகையான சக்தி ,வளம், விரயமாவதோடு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்வி, பொருளாதாரத்திலும் இந்த போதைப்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே எமது சமுதாயத்தை மீட்டெடுக்க அனைத்து துறையினரும் ஒன்றாக இணைந்து இந்த போதைப் பொருள்பாவனையினை தடுக்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts