யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு காசநோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட காசநோய் கட்டப்பாட்டு அதிகாரி ஆர். மாணிக்கவாசகன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் காசநோயின் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது.

அதேவேளை ஒன்று தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு 420 பேரும் 2011 ஆம் ஆண்டு 351 பேரும் 2012 ஆம் ஆண்டு 319 பேரும் 2013 ஆம் ஆண்டு 266 பேரும் 2014 ஆம் ஆண்டு 256 பேரும் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் 192 பேரும் காசநோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களை விட தற்போது சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 10 பேரும் 2012 ஆம் ஆண்டு 14 பேரும் 2013 ஆம் ஆண்டு 6 பேரும் 2014 ஆம் ஆண்டு 4 பேரும் 2015 ஆம் ஆண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 12 பேரும் காசநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இவர்களில் கூடுதலாக நிணநீர் முடிச்சுக்களில் காசநோய் தாக்கம் ஏற்பட்டவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் 2 மாதங்களுக்கு மேல் காசநோய் சிகிச்சை பெறாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது முற்றாகக் குறைந்துள்ளது.

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு 9 பேரும் 2011 ஆம் ஆண்டு 11 பேரும் 2012 ஆம் ஆண்டு 17 பேரும் 2013 ஆம் ஆண்டு 17 பேரும் 2014 ஆம் ஆண்டு 4 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் சிகிச்சை பெறாமல் இருந்தவர்கள் முற்று முழுதாக குறைக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான நடவடிக்கை காரணமாக சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் தொகை முற்றாக இல்லாது போயுள்ளது.காச நோயின் தாக்கம் உள்ள ஒருவருக்கு வேறு நோய்த்தாக்கம் அதிகளவில் ஏற்படும் போது இறப்பு நேரிடுகின்றது.

அந்தவகையில் 2010 ஆம் ஆண்டு 15 பேரும் 2011 ஆம் ஆண்டு 12 பேரும் 2012 ஆம் ஆண்டு 21 பேரும் 2013ஆம் ஆண்டு 21 பேரும் 2014 ஆம் ஆண்டு 29 பேரும் 2015 ஆம் ஆண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதி யில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாணம், உடுவில், கோப்பாய் பிரதேசங்களில் காசநோய்த்தாக்கம் கண்டறியப் பட்டவர்கள் அதிகமாக இருப்பதோடு கரவெட்டி, பருத்தித்துறை, வேலணை, நல்லூர், சங்கானை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற் றுறை ஆகிய பிரதேசங்களில் இந்த நோய்த்தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலை, அலுவலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவாக பலர் ஒன்று கூடும் இடங்களில் காசநோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அவ்வாறான இடங்களில் காசநோய்த்தாக்கத்திற்கு உள்ளானதாக கண்டறியப்பட்ட ஒருவர் குறைந்தது 2 கிழமைகளுக்கு வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறுவது சிறந்தது.

அத்துடன் தொடர்ச்சியான முறையில் சிகிச்சை பெற்றுவருவதன் மூலம் நோய்த்தொற்று வேகத்தைக் குறைத்தும் காசநோயை யாழ். மாவட்டத்தில் முற்றுமுழுதாக இல்லாமலும் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காசநோய் பற்றிய உரையாடல்

Related Posts