Ad Widget

யாழ்.மாவட்டத்தில் கல்வி, விளையாட்டுத்துறைகள் அபிவிருத்தி

‘யாழ்.மாவட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதேவேளை, வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் குறித்த இரண்டு துறைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப அறிவையும் எமது மாணவ செல்வங்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்’ என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

pg05

விளையாட்டுத்துறைகளின் வளர்ச்சிக்காக அக்கறை கொண்டு அரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனவும் அவர் தெரிவித்தார்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம் (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் மட்டுமல்லாது நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவே மகிந்தோதய தொழில்நுட்பபீடம் இப்பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

முக்கியமாக கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் எமது மாணவர்கள் தேசிய ரீதியில் பங்கெடுக்க வேண்டுமென்பதற்காக பல்வேறுபட்ட உதவித் திட்டங்களையும் அவர் செய்து வருகின்றார்.

ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 12 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தார்’ என்றார்.

60 மில்லியன் ரூபா செலவில் குறித்த தொழில்நுட்பப்பீடம் ஆறுமாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் நந்தகுமார், பிரதிக்கல்விப்பணிப்பாளர் ரவீந்திரன், கோட்டக்கல்வி அதிகாரி சிறிராமச்சந்திரன், பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி யமுணா நந்தகுமார், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெகத் அபேயக்கோன், வல்வெட்டித்துறை எதிர்க்கட்சித் தலைவர் கைலாஜினி, ஈ.பி.டி.பியின் வடமராட்சி கரையோர இணைப்பாளர் ரட்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts