Ad Widget

யாழ். மாவட்டஎம்.பிக்கள் எண்ணிக்கையை 11 ஆக அதிகரிக்க தேசிய நிறைவேற்று சபையில் யோசனை!

சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

தேசிய நிறைவேற்றுச் சபையில் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் வண. அத்துரெலிய ரட்ண தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய யோசனையின் பிரகாரம், 225 ஆக இருக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கையை 238 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. தேர்தல் தொகுதிகளும் அப்படியே இருக்கும் . சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பல்லின தேர்தல் தொகுதிகளுக்குமான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. எனினும், அங்கு 9 எம்.பிக்களே இருக்கின்றனர். எனவே, 11 தொகுதிகளுக்கு 11 எம்.பிக்கள் என்று எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்ற நிலையில், 12 எம்.பிக்களே இருக்கின்றனர். அங்கு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் பிரதிநிதித்துவம் வரும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கப்படும்.

பல்லின தேர்தல் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ஆல் அதிகரிக்கப்படும். இதன்மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும். இந்த உத்தேச திட்டத்தின் மூலம் சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் .

தேசிய நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்ட உத்தேச தேர்தல் முறைமை மாற்ற யோசனைக்கு அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

Related Posts