Ad Widget

யாழ். மாநகர முதல்வரிடம் அதிகாரங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.

மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வருடம் டிசம்பர் 31 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்டாத காரணத்தினால், இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 14 நாள்களுக்கு மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தலை அதிவிசேட வர்தமானியின் ஊடாக ஆளுநர் பிறப்பித்துள்ளார்.

1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவான) சட்டத்தின் 2(1)(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய (252 ஆம் அத்தியாயமான) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 326 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிவித்தலின் படி, இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 14 நாள்களுக்கு அல்லது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படும் வரை சம்பளங்களும் படிகளும், பயணப் படிகள், வழங்கு பொருள்களும் தேவைப் பொருள்களும், ஏற்றியிறக்கல் தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவைகள், பழுதுபார்த்தலும் பராமரித்தலும், வட்டிக் கொடுப்பனவு, சபை ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இலங்கை வங்கி லீசிங் கொடுப்பனவு ஆகிய செலவுகளை 2023 ஆம் ஆண்டு உத்தேச மதிப்பீட்டுக்கு அமைவாக செவுகளை மேற்கொள்வதற்கு யாழ். மாநகர முதல்வருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts