யாழ். மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் போராட்டம்

யாழ். மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாநகர சபையின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை முதல் நண்பகல் வரை இந்த ஆர்ப்பாட்டத்தினை இவர்கள் முன்னெடுத்தனர்.

யாழ்.மாநகர சபையின் கீழ் 180 பேர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள்.

நாளாந்த சம்பளத்தின் அடிப்படையில் கடமையாற்றும் தம்மை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த காலங்களில், நிரந்தர நியமனம் வழங்க கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 3 மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் கடந்த காலங்களில் இருந்த யாழ்.மாநகர ஆணையாளர்கள் 3 பேரிடமும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தமது குடும்ப சூழ்நிலைகள் மற்றும் வாழ்வாதார நிலமைகளை கருத்திற்கொண்டு தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், யாழ். மாநகர ஆணையாளரை சந்தித்து நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடிய போது, வயதெல்லை பார்ப்பதாகவும், அதில் 16 பேருக்கு மட்டும் நிரந்தர நியமனம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

180 பேரில் 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள மறுத்த சுகாதார ஊழியர்கள், அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Related Posts