Ad Widget

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது- கஜேந்திரகுமார்

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய அமைப்பு இந்த பாதீட்டை எதிர்க்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.

ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது.

ஒரு கோடி ரூபாயில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.

அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை இலங்கை அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் இருக்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனெனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே, மாநகர சபைக்குள் மாத்திரமல்ல. உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts