Ad Widget

யாழ். மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ஆதரவாளர்கள் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அறிவுறுத்தல்- தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் 50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை நிற ஹைஏஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றனர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

நேற்று இரவு கோத்தாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீடுகளின் மதில்களில் ஒட்டிவந்தனர். அதன் தொடர்ச்சியாக எனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன் .

யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு, அவர்கள் யாரிடம் கேட்க வேண்டும் மிரட்டல் தொனியுடன் மிரட்டினர்.

சுவரொட்டிகளையும் அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர்.

இருப்பினும் அதற்கு நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர்.

ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டன.

நான் அவர்களுக்கு மரியாதையாகத்தான் கூறினேன், சுவரொட்டிகளை எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று. ஆனால் அவர்கள் அதிகார வெறியுடன் செய்து காட்டுவோம் என்ற மிரட்டல் பாணியுடன் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

தேர்தல்காலம் என்றால் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள்தான். ஆனால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற வகையில் உரிமையுடன் எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று மரியாதையாக சொன்னபோதும் யாரிடம் கேட்கவேண்டும் ஒட்டுவதற்கு என்று மிரட்டிவிட்டு சென்று விட்டு பின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டியது அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் முன்னர் நடைபெற்ற ஏதேட்சைத்தனமான அதிகார வெறியுடனான கொடுங்கோல் ஆட்சிமுறையினையே நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என்ற செய்தியையா இவர்கள் இச் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் – என்றார்.

Related Posts