Ad Widget

யாழ்.மாநகரில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தகர்களை கடை திறக்க அனுமதி மறுப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 300 பேர் வரை இரண்டாவது பிசிஆர் பரிசோதனையை நடத்தாததால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களுக்கான பிசிஆர் மாதிரிகளை இன்று பெறுவதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி முன்னெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சந்தை, கடைத் தொகுதிகளில் ஏற்பட்ட கோரோனா பரவல் காரணமாக இரண்டு வாரங்களில் 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் மேற்கொண்ட அழுத்தத்தால் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் நேற்று அனுமதியளிக்கப்பட்டது.

உரிமையாளரோ பணியாளரோ தொற்றாளர்களாக அடையாளம் காணப்படாவிடின் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டது.

எனினும் சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஆதரவுடன் பிசிஆர் பரிசோதனைக்கு தம்மை ஈடுபடுத்தவில்லை. மேலும் 300 பேர் வரை இரண்டாவது பிசிஆர் பரிசோதனைக்கு முன்வரவில்லை.

அவர்கள் அனைவரும் வர்த்தக நிலையங்களைத் திறக்க நேற்றையதினம் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இன்று அவர்களிடம் மாதிரிகளைப் பெற யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா மாநகரில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்ட போது சுகாதாரத் துறைக்கு தமது முழுமையான ஆதரவை வவுனியா வர்த்தக சங்கம் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அவ்வாறான ஆதரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts