Ad Widget

யாழ். மாநகரின் கழிவகற்றலை சிங்கள தனியார் நிறுவனத்திடம் வழங்கத் தீர்மானம் என்ற செய்திக்கு முதல்வர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாநகரின் திண்மக் கழிவகற்றல் பணிகளை தென்னிலங்கை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் நிராகரித்துள்ளார்.

“யாழ்.மாநகர சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எடுக்கமாட்டேன். அத்தோடு இந்த விடயத்தைச் செய்வதாயின் சபையின் ஒப்புதல் பெறப்படவேண்டும். தன்னிச்சையாக என்னால் செய்யக் கூடிய விடயம் இதுவல்ல. எனவே இந்தச் செய்தி முற்றிலும் தவறானது” என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர முதல்வரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை அவர் இன்று (23) காலை நடத்தினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஈபிடிபியுடன் ஆதரவோடு யாழ்ப்பாண மாநகர சபையில் ஆட்சியமைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ். மாநகரை எழில்மிக்க மாநகராக்குவோம் என்று கூறிக் கொண்டு, இங்குள்ள ஊழியர்கள் வெளியாள்கள் செய்வதைப் போன்று செய்யமாட்டார்கள் என்பதற்காக சிங்கள ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளனர்” என்று பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான கலந்துரையாடல்கள் எனது மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அத்துடன், இந்தச் செய்தி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் அவர்கள் மறுப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

நான் பதவியேற்ற நாள் முதல் சுகாதாரத் தொழிலாளர்களுடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றேன். அவர்களின் தொழில் சார்ந்த விடயங்கள் – அவர்களை எவ்வாறு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது – அவர்களை தொழில்சார் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்க முடியும் உள்ளிட்ட விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றேன்.

தற்போது கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் அனைவரும் எமது ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, வளர்த்தவர்களாக தோற்றமளிப்பீர்கள் என்ற உறுதிமொழியை தொழில் சங்கத்துக்கு வழங்கியுள்ளேன்” என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.

Related Posts