Ad Widget

யாழ். மாணவர்கள் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணை நடத்தியமை, சாட்சியங்கள் அச்சுறுத்தப்பட்டமை ஆகியன தொடர்பில், ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் இன்றுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும், முதலாவது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டபோது தாம் உடனே மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமையானது மேலதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த வழக்கு விசாரணையின் போது இவ்விடயங்களை நீதிமன்றம் கவனத்திற்கொள்ளுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை விபத்தென பொலிஸார் சோடித்திருந்தாலும், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கிச்சூட்டு காயம் காணப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியதையடுத்து சம்பவ நேரத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். கஜன் எனும் மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்ட சக மாணவனாக சுலக்ஷனை பொலிஸார் அடித்துக்கொன்றதாகவும் தவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts