Ad Widget

யாழ், மன்னார் ஆயர்கள் விவகாரம், கூட்டமைப்பு கண்டனம்

suresh-peramachchantheranகொலைகள் நடக்கலாம், ஆட்கள் கடத்தப்படலாம் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இவற்றினை எதிர்த்து கதைப்பவர்களை தேசத்துரோகிகள், அவர்களைக் கைது செய்யுங்கள் என்பது இலங்கை அரசின் ஆட்சியில் உருவாக்கியுள்ள சிங்கள பௌத்த தீவிரவாத குழுக்களின் வழமையாகிவிட்டது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.

மன்னார் மற்றும் யாழ். ஆயர்களுக்கெதிராக சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும் அறிக்கை விடுவதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும்’ அவர் தெரிவித்தார்.

இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘மன்னார், யாழ்ப்பாணம் ஆயர்களுக்கெதிராக சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் விசாரிக்க வேண்டுமென்றும், இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்த குற்றவாளிகள் என்ற தோரணையில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய அறிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அதனை ஆய்வு செய்யக்கூடிய அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ரெப் இலங்கை வந்திருந்த பொழுது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களைச் சந்தித்து யுத்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளையும் இன்றைய நிலைமைகளையும் கேட்டறிந்தார்.

இவை இரகசியமான விடயங்கள் அல்ல. இவை தொடர்பான தெளிவான அறிக்கைகளை ஆயர்கள் வெளியிட்டிருக்கின்றனர். யுத்தம் நடந்த காலத்தில் கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டன என்பதும், இரசாயன குண்டுகள் பாவிக்கப்பட்டன என்பதும் இரகசியமான விடயங்கள் அல்ல.

இத்தகைய இராயன குண்டுத் தாக்குதலில் பலர் எரியுண்டு இறந்தனர் என்பதும் கொத்துக் குண்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்பதும் யுத்தகாலத்திலேயே வெளிவந்த உண்மைகள். அது மட்டுமன்றி நிலக்கண்ணி வெடிகளை அகற்றுகின்ற காலத்தில் கொத்துக் குண்டுகளின் உதிரிப்பாகங்கள் எடுக்கப்பட்டன என்பதும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்.

ஆகவே இது சர்வதேச ரீதியாக யுத்த நெறிமுறைகளை மீறிய செயலாகும். இதனை வெளியிடும் பொழுது சிங்கள பௌத்த தீவிரவாதிகள் அச்சமடையவதற்கு எந்தத் தேவையுமில்லை.

மேற்படி சம்பவங்கள் நடைபெறவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுமாக இருந்தால் அதனை மிகத் தெளிவாக நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தவறாகப் பேசப்பட்டிருந்தால் அது குறித்துப் பின்னர் ஆராயலாம். அதனை விடுத்து அரசாங்கம் தான் நினைத்ததையும் விரும்பியதையும் செய்கின்றது. அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றோம். இந்த நாடு எவ்வாறு சிங்கள மக்களுக்குரியதோ அதேபோன்றே தமிழ் மக்களுக்கும் உரியது. ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக தமிழ் மக்களை எப்படியும் நடத்தலாம் என்பதை ஏற்க முடியாது.

இந்த நாட்டின் கௌரவ பிரஜைகள் என்ற அடிப்படையில் எமது அனைத்து உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. அந்த வகையில் ஆயர்களின்மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதையும் மிரட்டுவதையும் ஏற்க முடியாது. ஆயர்கள் மீது அநாவசியக் குற்றங்கள் சுமத்துவது இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாக மேலும் அந்நியப்படுவதற்கே வழிவகுக்கும்’ எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts