Ad Widget

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனம் : பதில் அதிபரைத் தடுப்பது சட்டவிரோதம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

மத்திய கல்லூரி அதிபர் நியமனம் முறைப்படி இடம்பெற்றும் அவரை பதவியேற்கவிடாமல் பதில் அதிபர் தடுப்பது சட்டவிரோதம் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ். மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திபில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதிபர் நியமனத்திலே பாதிக்கப்பட்ட அதிபரும் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றார்கள்.

மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 2 அல்லது 3ஆக இருந்தாலும் சரியான நிலைப்பாட்டில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவினை வழங்க முடியும்.

தனிப்பட்ட ரீதியில் எவர் சார்பிலும் நாங்கள் முடிவு எடுப்பதில்லை. இந்த விடயத்தில் நாங்கள் ஒரு கொள்கை சார்ந்த முடிவு எடுக்கின்றோம்.

யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் முறைப்படி இடம்பெற்றிருக்கிறது. அதிபர் நியமனம் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின் ஊடாக அதிபர் தேர்வு இடம்பெற்றிருக்கிறது.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் உதவியோடு அந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

மத்திய கல்லூரியின் பதில் அதிபராக இருந்தவரின் நியமனம் தற்பொழுது வறிதாக்பட்டிருக்கிறது.

புதிய அதிபர் நியமனம் இடம்பெற்ற பின்னரும் கூட பதில் அதிபர் தொடர்ச்சியாக செயற்படுகிறார் என்றால் அவருக்கு பின்னால் யாரோ ஒரு தரப்பு இருக்கிறது என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

பதில் அதிபராக இருப்பவருக்கு கல்வி அமைச்சோ அல்லது பொதுச் சேவை ஆணைக்குழுவோ இதுவரை எந்த கடிதங்களும் வழங்கியதாக தெரியவில்லை.

அதிபர் நியமனம் இடம்பெற்ற பின்னரும் பதில் அதிபராக இருந்தவருக்கு தொடர்ச்சியாக செயற்படுமாறு எந்தவித கட்டளைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் என்ன அடிப்படையில் இவர் தொடர்ச்சியாக பதில் அதிபராக இருக்கிறார் என்பது தெரியவில்லை. இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயற்பாடு.

தகுதியான அதிபர் ஒருவரை பதவியேற்க விடாமல் குறித்த பதில் அதிபர் சட்டவிரோதமான முறையில் தடுத்துக்கொண்டிருக்கின்றார். அரசியல் பின்புலம் இல்லாமல் இது எவ்வாறு நடைபெற முடியும் என தெரிவித்தார்.

Related Posts