Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை ‘பாஸ்’ நடைமுறை நீக்கம், பார்வையிடும் நேரங்களிலும் மாற்றம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக காலை 6மணிமுதல் காலை 6.30 மணிவரை,மதியம் 12மணி தொடக்கம் பி.ப1மணி வரை, மாலை 5மணி தொடக்கம் 6 மணிவரை காலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்க மாத்திரம் அனுமதிக்கப்படும்.

விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்காக இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் அனுமதி நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதோடு ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகே இரு பார்வையாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேவைக்கும் நோயாளர்களின் தேவைக்கும் என எடுத்து வரும் பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுச் செல்லாதுதம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

வைத்தியசாலை வளாகத்தினுள் வெற்றிலை,சிகரெட்,மதுபானம், உள்ளடங்கிய போதைப் பொருட்களை எடுத்து வருவது,பாவிப்பது,நோயாளர்களுக்கு வழங்குவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.

சிறுவர்கள், முதியவர்கள் மிக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்கள் இயன்றவரை விடுதிகளில் பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

தீவிர சிகிச்சைப் பிரிவு,அதி தீவிர சிகிச்சைப் பிரிவு,பிரசவவிடுதிகள், குழந்தை விடுதிகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குள் உள்ளதால் இயன்றவரை மேற்படி பகுதிக்கு பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

Related Posts