Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலை ஆண் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு, வைத்தியசாலை நிர்வாகம் பதில் நடவடிக்கை எடுக்காமையினைக் கண்டித்து போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பை நடத்தினர்.

nurse_001

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்க்க சென்றிருந்த உறவினர் ஒருவருக்கும், குறித்த விடுதியில் இருந்த ஆண் தாதி ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது.

இதனையடுத்து நோயாளரை பார்க்கச் சென்றிருந்த நபர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆண் தாதி தம்மை தாக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆண் தாதியை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தி 70 ஆயிரம் ரூபா காசு பிணையில் தாதி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போதனா வைத்தியசாலையில் தாதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியே தாதியர்கள் நேற்றய தினம் மாலை பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது தாதியர்கள் குறிப்பிடுகையில்,

பொய்க் குற்றச்சாட்டு பதிவு செய்த நபருக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் பதில் நடவடிக்கை எடுக்காமை மற்றும் வைத்தியசாலைக்குள்ளும், வைத்தியசாலை தாதியர் விடுதிக்குள்ளும் பொலிஸார் நுழைந்து விசாரிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியமை,தாதியை பாதுகாக்காமை உள்ளிட்ட விடயங்களை எதிர்த்தும் தாம் இந்த பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்கள்.

மேலும், பொய்யான முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் வருத்தம் தெரிவிப்பதுடன், பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்த நபர் பகிரங்க மன்னிப்பை கோரவேண்டும் எனவும் தாதியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றய தினம் தொடங்கப்பட்டுள்ள பணி புறக்கணிப்புக்கு பொறுப்பானவர்கள் பதில் கொடுக்காதுவிட்டால் தொடர்ந்தும் பணி புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும்.

அடுத்தகட்ட பணி புறக்கணிப்பில் தேசிய மட்டத்திலுள்ள சகல தொழிற்சங்கங்கள், வைத்தியர் சங்கங்கள், தாதியர் சங்கங்கள் பங்கு பற்றும் எனவும் தெரிவித்துள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தாம் பணியை மேற்கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்

Related Posts