Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிய மருத்துவர்கள் இடமாற்ற பிரச்சினை நேற்றுடன் முடிவு

sribavanantharaja_jaffna_hosயாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெறத் தகுதியுள்ள வைத்தியர்களில் 24 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

இதன்படி ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவந்த கருத்து மோதல்கள் இழுபறியின் பின்னர் இட மாற்றப் பிரச்சினை நேற்றுத் தீர்வுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெறும் 24 வைத்தியர்களில் 18 பேர் யாழ்.மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 6 பேரில் கிளிநொச்சிக்கு ஒரு வரும், நாவலப்பிட்டிக்கு 2 பேரும், கொழும்புக்கு 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தினுள் உள்ள வைத்திய சாலைகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்களில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு இருவரும் ஏற்கனவே சென்றுள்ளனர்.

இந்த 24 வைத்தியர்களும் போதனா வைத்திய சாலையில் 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியிருந்தனர். இதன் போது இவர்கள் செய்த பணியை பாராட்டுகிறேன்.

வெளிமாவட்டங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டவர்கள் பதிலீட்டு வைத்தியர் நியமனத்தின் அடிப்படையிலேயே சென்றுள்ளனர்.

இதன்படி இந்தத் தொகையினருக்கு ஏற்ப பதில் வைத்தியர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டும். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து ஒரு வைத்தியர் பதிலீடாக வந்துள்ளார்.

ஆனால் ஏனையவர்கள் பதிலீடாக இன்னும் வரவில்லை. பதிலீட்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டால் மாத்திரமே போதனா வைத்தியசாலையில் மக்களுக்கு முழுமையான தேவையை வழங்க முடியும் என்றார் பவானந்தராஜா.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடமாற்றம் பெறத் தகுதியுள்ள 88 வைத்தியர்கள் உள்ளனர். அவர்களை படிப்படியாக இடமாற்றம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இடமாற்றம் பெறும் வைத்தியர்கள் அதனை எதிர்த்திருந்தனர்.

அதனால் இடமாற்றப் பிரச்சினை ஒரு வார காலத்துக்கும் மேலாக இழுபறிப்பட்ட நிலையில் நேற்றுத் தீர்வுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts