Ad Widget

யாழ்.பொதுநூலகத் தீ வைப்பில் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் தொடர்பு – முதலமைச்சர்

vicky-libruaryகடந்த 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்தத் தீவைப்புடன் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தொடர்புபட்டிருந்ததாகவும் குடிபோதையில் இருந்த சிங்கள சிப்பாய்கள் சிலரும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கால கட்டத்தில் 16 மொழிகளில் புலமை வாய்ந்த தாவீது அடிகளார் யாழ். நூலகத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும் ஆராய்ச்சி முடிவில் நூலகம் எரிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் உயிரிழந்தார். இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொது நுலகத்துக்கு ஒரு தொகுதி நுல்கள் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் முதலமைச்சர்.

தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிகூடிய புத்தகங்களைக் கொண்ட நூலகமாக யாழ்ப்பாண நூலகம் ஒரு காலத்தில் விளங்கியது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பெறுமதி மிக்க ஆவணங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதன் விளைவாக ஆவணங்கள் மீளவும் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தும்போது தெரிவித்ததாவது:

தென்கிழக்காசிய நாடுகளிலேயே 95 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகமாக யாழ்ப்பாண நூலகம் விளங்கியது. தீ வைப்பின் காரணமாக பொக்கிசங்களாகக் கருதப்பட்ட நூல்கள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகின.

தற்போது ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் உதவியுடன் பெருந்தொகுதி நூல்கள் பொது நூலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்த நூலகத்தின் அபிவிருத்திக்கு இவ்வாறான உதவிகள் பயனுள்ளதாக அமையும் – என்றார்.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் நூலகங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு அமைவாக 1.2 மில்லியன் பெறுமதியான 284 நூல்கள் யாழ்பாணம் பொது நூலகத்துக்கு நேற்று கையளிக்கப்பட்டன. அந்த நூல்களில் சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பயனடையக் கூடியதான நூல்கள் வழங்கப்பட்டன.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆனல்ட் தலைமையிலான குழுவினர் நேரடியாக வருகை தந்து நூல்களைக் கையளித்தனர். நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர சபை ஆணையாளர் மற்றும் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அதிகாரிகள், நூலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி

யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு

Related Posts