Ad Widget

யாழ். புகையிரத நிலையத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டம்

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்காவிடின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்போம் என வடக்கு, கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ஒன்றியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

strike-train

யாழ். புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை 10.30 மணியிளவில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த 3 வருடங்களாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். நாளாந்தம் 250 ருபா சம்பளத்திற்கு 8 மணித்தியாலயங்கள் கடமையாற்றி வருவதுடன், நிரந்தரம் மற்றும் சம்பள அதிகரிப்பு, பாதுகாப்பு உட்பட பல அடிப்படை உரிமைகளைக் கோரி பல உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்த போதும், இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக வடக்கு, கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

250 ரூபா சம்பளத்தில் எமது பிள்ளைகளின் மற்றும் எமது எதிர்காலம் பற்றி கனவு கூட காணமுடியவில்லை. பொலிஸாரின் அடிமைகளாக நடாத்தப்படுகின்றோம். எமது தொழில் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக 2 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இவ்வாறு உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுப்பதனால் எமது வாழ்க்கையினை அழித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எமக்கு தீர்வுகளைத் தருவதற்கு யாரும் முன்வரவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் எமது பிரச்சினைகளை கூறிய போதும், ஒருவரும் பதில் தரவில்லை. ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் கடிதத்திற்கு கூட பதில் தர மறுக்கின்றார்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எமது பிரச்சினைகள் குறித்து அறிவித்துள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூட எமது பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Related Posts