Ad Widget

யாழ் பிரதான தபால் நிலையத்தில் தமிழில் பற்றுச்சீட்டு பெற 30 நிமிடங்கள் காத்திருந்த இளைஞன்!!

யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழில் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து , தமிழ் எழுதி வாங்கி சென்று இருந்தார். யாழ்.பிரதான தபாலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக காவல்துறையினரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது , குறித்த இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டில் எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதன் போது உத்தியோகஸ்தர் , நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப்பதே வழமை ஆங்கிலத்தில் தான் எழுதி தருவோம் என கூறியுள்ளார். அதற்கு குறித்த இளைஞன் உங்களின் தாய் மொழி தமிழ் தானே அதே போன்று என் தாய் மொழியும் தமிழ் எனவே நீங்கள் தமிழில் எழுதி தாருங்கள் என கோரியுள்ளார்.

அதற்கு அந்த உத்தியோகஸ்தர் அவ்வாறு எழுதி தர முடியாது. என கூறிய போதும் , தனக்கு தமிழ் மொழியில் எழுதி தந்தால் மாத்திரமே பற்றுசீட்டை வாங்குவேன் என கூறி நின்ற போது , மிரட்டும் தொனியில் தமது கடமைக்கு இடையூறு விளைவிக்கின்றீர் என காவல்துறையில் முறையிடுவோம் என கூறியுள்ளனர்.

அதற்கும் இளைஞன் அஞ்சாது , தனக்கு தமிழ் மொழியில் எழுதி பற்று சீட்டு தர வேண்டும் என தபாலகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். சுமார் 30 நிமிட காத்திருப்பின் பின்னர் தபாலக உத்தியோகஸ்தர் குறித்த இளைஞனை அழைத்து தமிழ் மொழியில் பற்று சீட்டு எழுதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த இளைஞன் தெரிவிக்கையில்,

போக்குவரத்து குற்றத்திற்காக காவல்துறையினர் வழங்கும் பத்திரம் (தடகொல ) கூட தமிழில் எழுதி வாங்கி இருந்தேன். ஆனால் இங்கே (தபாலகத்தில்) தமிழ் உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுதி தர முனைந்த போது, தமிழில் எழுதி தாருங்கள் என கேட்டதற்கு கடமைக்கு இடையூறு என பொலிசில் முறையிடுவேன் என மிரட்டி பின்னர் எழுதி தந்தார்.

எமது மொழி உரிமையை நாமே காக்க தவற கூடாது. இங்குள்ள தமிழ் உத்தியோகஸ்தர்கள் பெரும்பாலும் பற்று சீட்டுக்களை ஆங்கில மொழிகளில் எழுதி தருகின்றார்கள். பற்று சீட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தான் விபரங்கள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில், தமிழ் உத்தியோகஸ்தர்கள் தமிழில் எழுத பின் நிற்கின்றார்கள்.

அரச திணைக்களங்களில் மற்றும் வங்கிகளில் பற்று சீட்டு பெறும் போது , நான் தமிழில் தான் பெற்றுக்கொள்வேன். ஓரிரு இடங்களில் மாத்திரமே தமிழில் எழுதி தந்தார்கள் மற்றைய இடங்களில் ஆங்கிலத்தில் எழுத முற்படும் போதும் , தமிழில் எழுதி தாருங்கள் என கேட்டால் ஒரு தடவை என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு எழுதி தருவார்கள். அதற்காக நான் எனது மொழியுரிமையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. தற்போதைய இளையோர்களும் தமது மொழியுரிமையை விட்டுகொடுக்க கூடாது என தெரிவித்தார்

Related Posts