Ad Widget

யாழ் பாதுகாப்பு தொடர்பில் விசேடமான வித்தியாசமான மூலோபாய நடவடிக்கைகள் : பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர

யாழ். குடாநாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படையினருடன் பொலிஸ் அதிரடிப் படையினரையும் இணைத்து இறுக்கமான பாதுகாப்பு கட்டமைப்பை செயற்படுத்தவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, பொலிஸார் மீதான வாள்வெட்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் அவர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, “சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சந்தேகநபர்களை கைது செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்காக நடமாடும் பொலிஸ் பிரிவு, விசேட தேடுதல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஒத்துழைப்புக்கள் பெறப்படவுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுக்கமான பாதுகாப்பு விதிமுறைகளை அமுல்படுத்தும் போது பொதுமக்கள் நடமாடுவதற்கு இடையூறாக கருதக்கூடும் என்பதால் யாழில் இதுவரை அவ்வாறு செய்யவில்லை எனினும் இனி யாழ்.குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர், தேசிய பாதுகாப்பு, பிரதேசத்தின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதும், அச்சமின்றி பொதுமக்கள் நடமாடக்கூடிய சூழலை உருவாக்குவதும் பொலிஸாரின் கடமை என்ற வகையில் விசேடமான வித்தியாசமான மூலோபாய நடவடிக்கைகளை கையாளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts