Ad Widget

யாழ். பல்கலை விரிவுரையாளர் நியமனம் முறைகேட்டை எதிர்த்து மனு தாக்கல்

Jaffna-University1யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட உதவி விரிவுரையாளர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரியும், இரத்துச் செய்யக் கோரியும், உயர்நீதிமன்றில் அடிப்படை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிவர்களில் தகுதியும் திறமையும் கூடியவர் இருந்தபோதும், அவரை நிராகரித்து வேறொருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு உதவி விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சையிலேயே இந்த ஊழல் இடம்பெற்றது என்று அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகப் பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும், மற்றும் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினமும் இந்த மனுவில் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் முதற்தரத்தில் சித்தி பெற்றதுடன் ஏற்கனவே தற்காலிக உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய மூப்பு நிலை அடிப்படையிலும் தான் முதல் நிலையில் இருந்த போதும் தன்னை நிராகரித்து, இரண்டாம் மேற்தரத்தில் சித்திபெற்றவரும், உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியதிலும் இளநிலையில் உள்ளவருமான ஒருவரை நியமனம் செய்திருப்பது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் எனவே அந்த நியமனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ரவிவதனி துரைசிங்கம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக் கொண்டுள்ள உயர் நீதிமன்றம், இன்று அதன் மீது விசாரணை நடத்தவுள்ளது.

Related Posts