Ad Widget

யாழ்.பல்கலை விரிவுரைகள் திங்களன்று ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

அத்துடன், மூடப்பட்டிருந்த பாலசிங்கம் மற்றும் ஆனந்த குமாரசுவாமி ஆகிய மாணவர் விடுதிகளும் திறக்கப்படவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட விடுதி மாணவர்கள் இரண்டு பேருக்கு கடுமையான டெங்கு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, கலைப்பீடத்தின் 1ஆம் வருட மற்றும் 4ஆம் வருட மாணவர்களின் விரிவுரைகள் கடந்த 15ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தொடர்ந்து மற்றைய பீடங்களின் 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களின் விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டன.

விடுதிகளில் 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களே தங்கியிருப்பதால் இந்நடவடிக்கையை அனைத்து பீடங்களும் மேற்கொண்டன.

இதனையடுத்து, விடுதிகளின் வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகம் ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டது.

தற்போது, டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, நிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்கட்கிழமை (29) முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts