Ad Widget

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையிலான அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு, அதனால் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் அமைதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் காணொளிப் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்று (வியாழக்கிழமை) காலை, கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கைகலப்பாக மாறியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மாலையில் நடாத்தப்பட்டது. இந்த விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் இரு மாணவர் குழுக்களும் மீண்டும் முரண்பட்டுக் கொண்டன.

மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, சம்பவ இடத்திலிருந்த கலைப்பீடாதிபதின் அழைப்பை அடுத்து, மாணவ ஆலோசகர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சில கலைப்பீட விரிவுரையாளர்கள் சகிதம் சம்பவ இடத்துக்குச் சென்றேன். அந்த இடத்தில் மாணவர் குழுக்களுக்கடையிலான மோதல் நிலையைச் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சியில் – இரண்டாம் வருட மாணவர்களுக்களைப் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் போது மூன்றாம் வருட மாணவர்கள் தள்ளுமுள்ளுப் பட்டுக்கொண்டதாகவும், அவ்வேளையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பரஸ்பரம் பௌதிகப் பலப்பிரயோகம் இடம்பெற்றது.

சம்பவம் பற்றித் தகவல் அறிந்த கோப்பாய் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தனர். மாணவர்களின் வேண்டுகோளை அடுத்து பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்றி விட்டோம்.

மிக நீண்ட நேர விவாதத்தின் பின் மாணவர்களிடம் பேசி, அமைதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்

Related Posts