Ad Widget

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை; வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பொலிஸார் ஏன் மூடி மறைக்க முனைந்தார்கள் என்பது பாரியதொரு கேள்வியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

மாணவர்கள் ஓடி ஒழிக்கப் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தவில்லை, அதனாலேயே சுட்டோம் என பொலிஸார் கூறுவதிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓடுபவர்களுக்குப் பின்னால் இருந்து சுட்டால், வாகனம் ஓட்டியவருக்கு எவ்வாறு முன்னால் துப்பாக்கி சூடுபட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து, இதற்கு பின்னால் வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? ஏன் இவ்வாறு பொலிஸார் நடந்து கொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தை சாதாரண விடயமாக எடுத்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், இதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் வட மாகாணத்தில் பொலிஸாரை வீதியில் காண முடியாது உள்ளதாகவும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணச் சடங்கின் போது, வீதியால் பெருந்திரளான மக்கள் சென்ற போதும் கூட, பொலிஸார் எவரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், பொலிஸார் தங்களுடைய கடமையில் ஈடுபடாமல் இருப்பதற்கு, இதற்கு பின்னால் ஏதாவது சிந்தனைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் பொலிஸ் மாஅதிபர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts