Ad Widget

யாழ் பல்கலை ஊழியர்கள் போராட்டம்

இன்றைய தினம் சகல ஊழியர்களையும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபடுமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது.

அந்த அறிக்கையில்

ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போரட்டம்

எம்மால் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் திகதிகளில் பதிவாளரூடாக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க அளவு உரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் 19.10.2016 இன்று அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம்.

25/01/2016, 17/02/2016, 19/02/2016, 23/02/2016, 25/04/2016(இருகடிதங்கள்), 21/06/2016, 30/06/2016, 07/09/2016, 09/09/2016, 13/09/2016

அவற்றில் சில பிரச்சினைகள்…

  • கல்விசாரா ஊழியர்களின் புகார்கள் அசமந்தப் போக்கிலேயே கையாளப்படுகின்றன.
  • அனைத்துப்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்ட காலத்தில் பல அலுவலகங்கள் முறையாக திறக்காத நிலையில் பொதுவான வரவுப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பயிலுநர்களின் கொடுப்பனவானது ஏனைய பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுள்ளபோதும் யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் வழங்கப்படாமை. (இது ஒப்பந்தத்தை மீறி பழிவாங்கும் செயல்) இதே காலப்பகுதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்காத நிலையில் கடமைக்கு சமூகமளிக்காத நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட்டதோடு அவர்களின் விடுப்புகளில் அந்நாட்கள் கழிக்கப்படவுமில்லை.
  • காலா காலமாக தொடரும் சீருடை, பாதணி, மழையங்கி வழங்குவதில் தாமதம்.
  • நிர்வாகக்கிளையில் தொடரும் பாரபட்சமும், நிர்வாக முறைகேடுகளும்.
  • இதுவரை ஊழியர்களின் உள்ளக சம்பள கணிப்பீட்டு தவறுகள் தொடர்பாக தாபனக்கிளை உரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலை. இதை 2013ம் ஆண்டிலிருந்து தீவிரமாக சுட்டிக்காட்டிவருகிறோம். தவறுகள் திருத்தப்பட்ட ஒருசிலர் மாதாந்தம் 2000ரூபா வரையிலான அதிகரிப்பை நிலுவையுடன் பெற்றுள்ளனர். மிக அண்மையில் 10வருடமாக ஒரு ஊழியரின் சம்பளக்கணிப்பீட்டில் இடம்பெற்றுவந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளனர்.
  • இவ்வருடம் மே மாதம் வெளிவந்த சுற்றுநிருபம் ஒன்றின் பிரகாரம் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளின் அடிப்படை சம்பளத்தில் படியேற்றம் செய்யப்படவேண்டும். ஆனால் அது இதுவரை இடம்பெறவில்லை. சுற்றுநிருபம் அமுலில் உள்ள நிலையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு விரைவில் வெளியிட உள்ளதாக ஆதாரமெதுவுமின்றி கூறி காலதாமதத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.
  • சிலரின் வருடாந்த சம்பள உயர்வு வழங்கல் பொருத்தமான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் வழங்கப்படாது நிலுவையில் உள்ளது.
  • 2008,மற்றும் அதற்கு பின்னர் நியமனம் பெற்ற சிலவகை ஊழியர்களின் கல்வி தராதர சான்றிதழ்களை ஒப்பிட்டு சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. சிலரை பெயர் குறிப்பிடுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க நாம் சில உதாரணங்களை பெயர் சுட்டிக் குறிப்பிட்ட போதிலும் அவர்கள் விடயத்தில் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  • அமையரீதியில் பணியாற்றிவரும், பணியாற்றி சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டவர்களின் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாதநிலையில் அதன் பின் உருவான நியமன பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
  • 25வருட கால சேவையை பூர்திதி செய்தோரில் சில வகையானோருக்கு அதற்கென வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இவ்வகையானோரின் கொடுப்பனவு பிற பல்கலைக்கழகங்களிலும் சில வருடங்களுக்கு முன்னர் வரை எமது பல்கலைக்கழகத்திலும் தாமதமின்றி வழங்கப்பட்டு வந்தது.
  • பரீட்சைக்கொடுப்பனவு வழங்கலில் ஊழியர் மத்தியில் பாரபட்சமும் சில சுற்றுநிருபங்களை தவறாக வியாக்கியானம் செய்தலும் தொடர்கிறது.
  • பல்கலைக்கழக மானிய ஆணைக்குமுவின் இடமாற்ற சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வவுனியா வளாகத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்ற ஊழியர் ஒருவரின் இடமாற்றத்தை அமுலாக்க தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றமை.

மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் குறைகேள் குழு, பேரவையால் நியமிக்கப்பட்ட மூவர் குழு, பதிவாளர், நிதியாளர் போன்றவர்களுடன் நேரடியாக பல தடவைகள் உரையாடப்பட்டபோதிலும் போதுமான முன்னேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. பாதிக்கப்பட்டு புகார் செய்தவர்களுக்கு பொறுமை காக்குமாறு தொடர்ந்தும் பதிலளிப்பது பொருத்தமற்றது.

இது தொடர்பில் 12-10-2016ஆம் திகதி கடிதம் மூலம் பதிவாளர், துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் பேரவை உறுப்பினர்களிற்கு அறிவித்துள்ளோம்.

எனவே இன்று 19-10-2016 புதன்கிழமை காலை 09.00மணிக்கு இராமநாதன் மண்டப முன்றலில் சகல ஊழியரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்றைய தினம் ஊழியர் பொது அறையில் பேணப்படும் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவது கட்டாயம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

குறிப்பு: சம்பள முரண்பாடு உள்ளோர், 25 வருட சேவைக்கான கொடுப்பனவைப் பெறாதோர், வருடாந்த சம்பள உயர்வு நீண்டகாலம் தாமதப்படுத்தப்படுவோர் மற்றும் ஏனைய பிரச்சினைகள் உள்ளோர் 18-10-2016 செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு ஊழியர் பொதுஅறையில் ஒன்று கூடும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

20161018_170908-copy

strike-notice

Related Posts